சேமிப்பு கணக்கு – பாதுகாப்பா? லாபமா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
நம்மில் பெரும்பாலானோருக்கு முதல் வங்கி அனுபவம் சேமிப்பு கணக்குடன் (Savings Bank Account) தான் தொடங்குகிறது. ஆனால், இந்த கணக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது? இதன் வருமானம், பாதுகாப்பு, வரி நன்மைகள் பற்றி நம்மில் பலர் ஆழமாக அறிந்திருப்பதில்லை.
இந்த கட்டுரையில், சேமிப்பு கணக்கின் முழுமையான விபரங்களை தொகுத்துள்ளோம்.
முக்கிய 3 அம்சங்கள்
1. முதலீட்டின் வருமானம் (Return) குறைவு
சேமிப்பு கணக்கில் நீங்கள் பெறும் வட்டி வீதம் (interest rate) மிகவும் குறைவாகவே இருக்கும். பொதுவாக 2.7% முதல் 3.5% வரை. இது பங்குச் சந்தை, நிலையான வைப்பு, அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளுடன்(Mutual Funds) ஒப்பிடும்போது மிகவும் குறைவானது.
2. எளிதில் பணமாக மாற்றும் திறன் (Liquidity) அதிகம்
இந்த கணக்கின் பெரிய பலம் இதுதான்! பணம் எப்போதும் உங்கள் வசதிக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி பணம் தேவைப்படும் மக்களுக்கும், தினசரி செலவுகளுக்குமான சிறந்த தேர்வாக இது இருக்கும்.
3. வரி செயல்திறன் (Tax Efficiency) குறைவு
சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். ஆனால் வருடத்திற்கு ₹10,000 வரை வருமானத்திற்கு வரிவிலக்கு உண்டு (Section 80TTA). இதைத் தவிர, Section 80C வரிவிலக்கு போன்றவை இதில் கிடைக்காது.
யார் SB (Savings Bank Account) கணக்கு திறக்கலாம்?
- 18 வயது உடைய எந்தவொரு இந்தியருக்கும், அடையாள சான்று மற்றும் முகவரி சான்று இருந்தால், சேமிப்பு கணக்கை திறக்க முடியும்.
- 18 வயதுக்குட்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கு திறக்க முடியாது. பெற்றோர் அல்லது பாதுகாவலர் இவர்களுக்காக கணக்கை திறக்க முடியும்.
- சில வங்கிகள் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தனி சேமிப்பு கணக்கை அனுமதிக்கின்றன. அதாவது அவர்கள் தாங்களாகவே பணம் வைப்பதும், எடுப்பதும் செய்யலாம்.
முதலீட்டு வரம்புகள் (Investment Limits)
- சில வங்கிகள் ₹100, ₹500 அல்லது ₹1000 எனக் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிக்கின்றன.
- சாதாரண சேமிப்பு கணக்குகளுக்கு அதிகபட்ச வரம்பு இல்லை.
- ஆனால் சில வகை கணக்குகள் (உதாரணமாக Jan Dhan Accounts) வரம்புகளை கொண்டிருக்கலாம்.
வருமானம் (Interest Rate)
- வட்டி வீதம் பொதுவாக 2.7% – 3.5% வரை வருடத்திற்கு வழங்கப்படும். சில தனியார் வங்கிகள் அதைவிட அதிகம் (4% – 6%) வரை வழங்கலாம்.
- பணவீக்க வீதம் பொதுவாக 5% – 7% இருக்கும். அதனால், சேமிப்பு கணக்கில் வைக்கும் பணம் மதிப்பிழப்பை சந்திக்கும்.
- வங்கியின் கொள்கைகளுக்கும், மார்க்கெட் நிலைமைக்கும் ஏற்ப வட்டி வீதம் மாறும்.
இழப்பு அபாயம் (Risk Factor)
- பாதுகாப்பு: சேமிப்பு கணக்கில் உள்ள உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். இது பண மதிப்பிழப்பு அபாயம் இல்லாதது. DICGC (Deposit Insurance and Credit Guarantee Corporation) மூலம் ₹5 லட்சம் வரை காப்புறுதி உண்டு.
- பணவீக்கம் : பணவீக்கம் என்பது ஒரு பொருளின் அல்லது சேவையின் விலை ஏற்றம் ஆகும்.பணவீக்கம் காரணமாக பணத்தின் வாங்கும் சக்தி குறையும். சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருந்தால், அதில் கிடைக்கும் வட்டி பணவீக்கத்தைக் கடந்துவிடவில்லை என்றால், உங்கள் பணத்தின் மதிப்பு நாளொன்றுக்கு குறைந்து கொண்டே இருக்கும்.
- காலவரம்பு: சேமிப்பு கணக்கில் கால வரம்பு கிடையாது. நீண்ட காலமாக வைத்திருக்கலாம்.
- பணம் எடுக்கும் வசதி: எப்போது வேண்டுமானாலும் ATM, மொபைல் பேங்கிங் (Mobile Banking), இன்டர்நெட் பேங்கிங் (Internet Banking) மூலம் பணம் எடுக்கலாம்.
வரி விவரங்கள் (Tax Rules)
- இந்த கணக்கில் பணம் வைப்பு செய்தாலும், அதற்கு Section 80Cயின் கீழ் வரிவிலக்கு கிடைக்காது.
- ஆனால், Section 80TTA கீழ் ₹10,000 வரை வட்டிக்கு வரிவிலக்கு உண்டு. அதை மீறினால், வருமான வரி (Income Tax) விதிக்கப்படும்.
சேமிப்பு கணக்கு என்பது பாதுகாப்பானது, அவசரநிலைக்கான நிதி அல்லது தினசரி செலவுகளுக்கே உகந்தவை. ஆனால், அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்புடையதல்ல. இது ஒரு அடிப்படை நிதி தொடக்கமாக இருக்கலாம்.
வளமான எதிர்காலம் வேண்டும் என்றால், மற்ற முதலீட்டு வாய்ப்புகளையும் ஆராய்வது அவசியம்.



















